A Promised Land

இலங்கைத் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைத் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 டிசம்பர் 2020

உணர்ச்சியூட்டும் பாராளுமன்ற உரைகள்

இலங்கைத் தமிழராக, 72 வருடமாக உணர்சி பெருக்கெடுக்கும் பேச்சுக்களையும் உரைகளையும்தான் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் தமிழ் அரசியல்வாதிகளின் வாயிலிருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறோம். 

தமிழ் அரசியல்வாதிகள், தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த வட்டுக்கோட்டை பிரகடனத்தால் உணச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள் வெவ்வேறு குழுக்களாக  துப்பாக்கி தூக்கினார்கள். 

ஆனால் சிறிது காலத்துக்குள்ளேயே அவர்களுக்கிடையில் யார் பிரதிநிதியென்ற சண்டை.  அவர்களுக்கிடையிலான அந்தச்  சண்டையில் ஆயிரங்களில் சகோதரப் படுகொலைகள். சகோதரப் படுகொலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி தலமைப் பொறுப்பை பறித்து எடுத்துக் கொண்ட  திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் துவக்கால் கூட சிங்கள தலைமைகளுடன் பேசிப் பார்த்தார்.

ஒன்றும் நடக்கவில்லையே! 

முள்ளிவாய்க்காலில் உயிர் அழிவுகள் உடமை அழிவுகள் என்று உறவுகளைத் தொலைத்துவிட்டு, அப்போது தமிழ் மக்களுடன் கூட இருந்து பாதுகாக்க வேண்டிய நேரத்தில், மக்களை கைவிட்டு, தமது அலுவலகத்தை பூட்டிக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு ஓடிப்போன  ஐநாவிடம் நீதிகேட்டுப் போய் நிக்கிறோம்.

ஒரு தீர்வும் இதுவரை கிடைக்கவில்லையே! 

தற்போது மீண்டும் அதே உணச்சியூட்டும் பேச்சுக்கள். அவற்றை  யூரியுபிலும் பேஸ்புக்கிலும் மீண்டும் மீண்டும் பார்த்து சுய இன்பம் அடைந்து கொள்ளும் சமூகமாக நாம். 

இந்தப் பேச்சுக்களால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.  மாறாக   சிங்களவர்கள் மத்தியில் எங்கள் மீதான இனவெறி இன்னும் அதிகரிக்குமே தவிர பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்காது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்   முதன்முறை வாக்களிக்க தகுதிபெற்ற சுமார் 1.5  மில்லியன் வாக்காளர்களின் வாக்கு அளிக்கப்பட்டது பௌத்த பீடங்களின் ஆசியுடன் போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டாபய அவர்களுக்கே! 

இலங்கையின் அரசியல்  பெரும்பான்மை பௌத்தர்களினால் தீர்மானிக்கும் ஒன்றாக மாறி ஓராண்டு பூர்த்தியாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மையினர். சாதாரண பெரும்பான்மையில்லை 72% வீதத்திற்கும் அதிகமானோர் அவர்கள்! 

இனி வரும் ஆட்சிகள் அரசாங்கங்கள் எல்லாமே பௌத்த பீடங்களின் ஆசியுடன் பெரும்பான்மை பௌத்தர்களின் ஆதரவுடனுமே வரும் என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டதொன்று! 

எமது பிரச்சினைக்கான தீர்வுப் பெட்டியின் திறப்பு ஐநாவிடமோ, அமெரிக்காவிடமோ ஐரோப்பிய ஒன்றியத்திடமோ அல்லது இந்தியாவிடமோ இல்லையென்பதையும் அது பெரும்பான்மை பௌத்தர்களிடம்தான் இருக்கின்றதென்ற யதார்த்தத்தையும் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். (இதை ஏற்றுக்கொள்ள எமக்கு கொஞ்சம் கஸ்ரமாகத்தான் இருக்கும்)

எமது 72 வருடகால எதிர்ப்பு அரசியல் அணுகுமுறையை மாற்றவேண்டியது தொடர்பில் சிந்திப்போம். எம்மிடமுள்ள மும்மொழிப் புலமையை கொண்டு எமது பிரச்சினைகளை பௌத்த பீடங்களிடம் கொண்டு செல்வோம். அவர்களுக்கு புரியவைப்போம். பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களுக்கு சமமாக தம்மை அமரவைக்கவில்லை என்று பௌத்த துறவிகளின் கலாசாரம் தெரியாமல் பழுத்த தமிழ் அரசியல்வாதியொருவர் முன்னம் கூச்சலிட்டது போல் அல்லாது இருப்போம். ஏனென்றால் அவர்கள் தமது அரசியல்வாதிகளுக்கு சாதகமான சமிஞ்ஞை  காட்டினால் மட்டுமே சிறுபான்மையினர் பிரச்சினையை இந்த நாட்டில் தீர்க்கமுடியும் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

இறுதியாக ஒரேயொரு விடயம். 

சுவிஸ் நாட்டில் நிரந்தர வதிவிட விஸா பெறுவதற்கு, வதிவிட உரிமை கோருபவர் தற்காலிகமாக வசிக்கும், பிரதேசத்தின் மக்கள் அனுமதி அளிக்கவேண்டும். அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே நிதந்தர குடியுரிமை அந்நாட்டில் கிடைக்கும். அதுக்காக கைகட்டி வாய்பொத்தி ஜெர்மனும் பிரஞ்சும் டச்சும் படிச்சு அவர்கள் முன் நல்ல பிள்ளையாக நடிச்சு விஸா எடுக்க இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழனால் முடியுமென்றால்,  இலங்கையில் பௌத்த சிங்கள பீடங்களை கைக்குள் கொண்டுவந்து அவர்களுடாக பௌத்த சிங்கள மக்களிடமிருந்தும் தமிழருக்கான தீர்வினை பெறமுடியும்.