இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த வாரம் இரண்டு நாள் அரசமுறைப் பயணமாக ஈரான் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானியின் அழைப்பினையேற்றே அவர் ஈரானுக்குசென்றிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2016 இல் இந்த அழைப்பு ஜனாதிபதிக்கு கிடைத்திருந்ததிலும் வேலைப்பழு காரணமாக 2017 ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே ஈரானுக்கான விஜயம் தொடர்பில் சரியான ஒரு தேதியை ஜனாதிபதி அவர்களினால் தீர்மானிக்க முடிந்தது. அதனடிப்படையிலேயே கடந்தவாரம் ஜனாதிபதி ஈரானுக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
ஈரான் நாட்டைப் பொறுத்தவரையில் அது இலங்கைக்கான கச்சா எண்ணைய் இறக்குமதியிலும் சுத்திகரிப்பிலும் செல்வாக்கை செலுத்துவதுடன் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியிலும் முக்கிய இடத்தினை வகித்து வருகின்றது.
இப்பின்னணியில் இவ்
விஜயம் இரு நாடுகளுக்குமிடையில் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் கூட்டு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதுடன் இலங்கையில் பொருளாதார, சுகாதார, கலை மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் அபிவிருத்தியினை நோக்காக கொண்டதாகவே அமைந்திருந்தது.
அத்தோடு, ஈரானிய
ஜனாதிபதி ஹசன் ரவுகானியுடனான சந்திப்பின்போது சுகாதாரம், மருத்துவ
விஞ்ஞானம், மருந்துப்
பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், தரப்படுத்தல், அளவையியல் பயிற்சி, சட்டவிரோத
போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல், திரைப்படம், தொலைக்காட்சி, கலாசாரம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்குமிடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியிருந்தன.
ஈரான் ஜனாதிபதிபதியுடனான சந்திப்பு |
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், இலங்கையில்
பொருளாதார அபிவிருத்திக்கு ஈரானிய அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்ப்பதாகவே ஈரானிய ஜனாதிபதியுடனான சந்திப்பில் கூறியிருந்தார். இலங்கையில்
எரிபொருள் விலையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும், ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பதை நோக்கமாக் கொண்டும், ஈரானிய
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும் குறிப்பிட்ட துறைகளில் இருநாடுகளுக்குமிடையிலுள்ள ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டே அவ்வாறு அவர் கூறியிருந்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை திடீரென அதிகரித்தமையின் காரணமாக இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக
அரசு உள்நாட்டில் மக்களிடமிருந்து பாரிய எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது. இதனால் கச்சா எண்ணைய் இறக்குமதியில் ஈரானிய அரசின் ஒத்துழைப்பினை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. இதனால் இவ்விடயம் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவினால் அச்சந்திப்பின் அக்கறை செலுத்தப்பட்டது.
கச்சா எண்ணையை நேரடியாகவே இறக்குமதி செய்து இலங்கையில் அதனை சுத்திகரிப்பு செய்தவதே நம்நாட்டுக்கும் இலாபகரமானதாகும். எனவே இலங்கையில் எண்ணை சுத்திகரிப்புத் துறையினை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான தொழில்நுட்ப உதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது கோரியிருந்தார். அதற்கு சாதகமான பதில் கிடைத்திருக்கின்றது.
இதேவேளை கப்பல்களில் கொண்டுவரப்படும் கச்சா எண்ணையை கடலிலிருந்தே சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நேரடியாக விநியோகிக்கும் கடலடி குழாய் தொழில்நுட்ப முறையினை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக தென்கொரியாவுக்கு அண்மையில் விஜயம் செய்ய ஜனாதிபதி அவர்களிடம் தென்கொரிய அரசாங்கம் உறுதியளித்திருந்த பின்னணியிலேயே எண்ணைய் சுத்திகரிப்பு துறையை நவீன மயப்படுத்துவதற்காக ஈரானிய உதவியும் கோரப்பட்டுள்ளது.
இந்த எண்ணை சுத்திகரிப்பு தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுமிடத்து உள்நாட்டில் எண்ணைய் விலைகளை உள்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய நிலைமை ஏற்படும். அது
தற்போது எரிபொருள் விலைகளின் உயர்வால் பாதிப்பை சந்தித்திருக்கும் மக்களுக்கு ஆறுதலாக அமையும்.
இலங்கையின் தேயிலை மீதான கேள்வி சர்வதேச ரீதியில் தற்போது இறங்குமுகமாகவே இருந்து வருகின்றது. அண்மையில் ரஷ்யா இலங்கையின் தேயிலை ஏற்றுமதியினை நிறுத்தியிருந்தமையடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனை தொடர்புகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அந்தத் தடையினை வாபஸ் வாங்குமாறு கேட்டிருந்ததும், தற்போது அத்தடை நீக்கப்பட்டு தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றமையும் அறிந்ததே.
ஐரோப்பியா, ரஷ்யாவைப்
போலவே மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானும் இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்யும் முக்கிய நாடாக இருக்கின்றது. இதனால் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியினை அதிகரிப்பதன் மூலம் தேயிலையால் இலங்கை ஈட்டும் வருமானத்தை நிலையானதாக வைத்துக் கொள்ளவதற்கான அல்லது அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
இலங்கை வருமானத்தை ஈட்டும் இன்னுமொரு துறை சுற்றுலாத்துறையாகும். ஈரானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது பற்றியும் ஜனாதிபதி மைத்திரி, இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தியிருந்தார். வருடாந்தம் சுமார் 5000 ஈரானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாகவும் இந்த எண்ணிக்கையை 30000 ஆக அதிகாத்துக்
கொள்வது தொடர்பிலும், சுற்றுலாத் துறையில் இரு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்திக் கொள்வதோடு இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமானச் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பிலும் ஜானாதிபதியின் இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கையின் ரயில் பாதை முறைமையினை மேம்படுத்துவதற்கான ஈரானிய அரசாங்கத்தின் உதவியினை பெற்றுக்கொள்ளவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை ஈரானின் மிகவும் பலம்பொருந்திய ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சந்தித்தார். ஈரானிய ஜனாதிபதியையும் விட பலம்பொருந்திய ஆன்மீகத் தலைவர், ஈரானின்
முப்படைகளின் தளபதி என்பதோடு ஈரான் அரசாங்கத்தின் பல நிறுவனங்களையும்
ஈரானிய கொள்கை மற்றும் வெளியுறவு செயற்பாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார். அவருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்தது.
ஆன்மீக தலைவருடனான சந்திப்பின்போது |
பூகோள ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களில் இருநாடுகளும் அமைந்திருப்பதனால் இருநாடுகளின் அபிவிருத்தி தொடர்பிலும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்தியுடனான சந்திப்பில் ஆன்மீகத் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்டிருந்த அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததன் பின்னர் ஈரானுக்கு விஜயம் செய்த முதலாவது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆவார் எனவே சர்வதேச ரீதியில் இவ்விஜயம் அரசியல் அவதானிகளால் முக்கியமாக கூர்ந்து அவதானிக்கப்படுகிறது.
ஆயினும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அனைத்து நாடுகளுடனும்
நட்புறவை பேணும் வெளிநாட்டுக் கொள்கையினை கொண்ட ஒரு அரச தலைவர் என்ற ரீதியிலும், இந்த விஜயம் ஏற்கனவே திட்டமிட்ட விஜயம் என்ற
ரீதியிலும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு ஈரானுக்கான தனது
விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவ்வாறு பார்க்குமிடத்து ஜனாதிபதியின் இந்த ஈரான் விஜயம் இலங்கைக்கு பொருளாதார
ரீதியில் சாதகமாகவே அமைந்திருந்தது மறுப்பதற்கில்லை.
(20.05.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)