படம்:ஜனாதிபதி ஊடகப் பிரிவு |
இலங்கை அரசியல் தளம் கடந்த மூன்று வருடங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மே மாதம் 08 ஆம் திகதி மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமாகும் நாள் அதுவென்பதை விடவும், நல்லாட்சி
அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நிகழ்த்த இருந்தமையே இந்த பரபரப்புக்கு பிரதான காரணமாக இருந்தது.
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமாகியிருந்த நிலையில், அதற்கு
முந்திய நாளான ஏழாம் திகதி மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், “2020 இல் நான் ஓய்வு பெறமாட்டேன், செய்யவேண்டிய பணிகள் இன்னும் நிறையவே இருக்கின்றது” என கூறியிருந்தார். இந்தப் பின்னணியிலேயே கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, என்ன
கூறப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம் கலந்த குற்றச்சாட்டு “இந்த அரசாங்கம் எதையுமே செய்யவில்லை” என்பதாகும். அதற்கு
பதிலளிக்கும் விதமாகவே தனது கொள்கை விளக்க உரையினை பாராளுமன்றில் ஆரம்பித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், தற்போதைய அரசுக்கு ஆணையினை பெற்றுக்கொடுத்த
மக்களின் முக்கிய வேண்டுகோளாக இருந்த, இலங்கை சமூகத்தை மீண்டும் ஜனநாயக
மயப்படுத்தி மனிதநேயமும் பொறுப்பும் மிக்க ஒரு சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற
விடயம் கடந்த மூன்று
வருடங்களுள் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்று எடுத்துக் கூறியிருந்தார்.
முன்னைய ஆட்சிக் காகலத்தின்போது ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படாத்தோடு கருத்துச் சுதந்திரம் நசுக்கப்பட்டு, சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாழ்வதற்கான சூழல் இலங்கை மக்களுக்கு கிடைக்காத நிலையே காணப்பட்டது.. நீதித்துறை
தனது சுயாதீனத் தன்மையை இழந்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியாத ஒரு சர்வாதிகார ஆட்சியே அப்போது நடைபெற்று வந்திருந்தது. அதனை மாற்றி “ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மீளவும் நிலைநாட்டி, சட்டத்தின்
ஆட்சியை மீண்டும் உறுதிப்படுத்தி, நாட்டின் அனைத்து சமூகங்களுக்கிடையிலும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவேன்” எனக்கூறியே 2015 ஜனவரி 08 இல் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்ரிபால சிறிசேன, வெற்றி
பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு ஜனநாயகமும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாலேயே அவரால் மேற்கண்டவாறு கூறி தனது உரையினை ஆரம்பிக்க முடிந்தது.
கடந்த மூன்றாண்டு காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் மற்றும் சமூக ரீதியான அபிவிருந்தி செயற்திட்டங்களை இதன்போது விபரித்திருந்தார். ஔடத சட்டம், 19 ஆம் திருத்தச் சட்டம் என்பன அரசியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் நாட்டுக்கு மிக முக்கியமான சட்டங்களாகும். அதிலும் குறிப்பாக 19 ஆம் திருத்தச் சட்டத்தினை குறிப்பிடலாம். இதுவரையும் பதவிக்கு வந்த அரச தலைவர்கள் எவருமே செய்ய முயன்றிராத ஒரு விடயமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற விடயம் இருந்து வந்த்து. இந்த 19 ஆம்
திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு கிடைத்திருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவ்வதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முக்கியமான ஒரு மாற்றமகும். இந்த 19 ஆம்
திருத்தச் சட்டத்தின் மூலமாகவே சுயாதீன ஆணைக்குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் முன்னைய ஆட்சிக் காலத்தில் முகம்கொடுத்துவந்த பிரச்சினைகள், அதிலும் குறிப்பாக 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் தமிழ் மக்கள் ஒரு இறுக்கமான இராணுவ கட்டமைப்புக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அச்சமின்றி சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் அன்று செயற்கையாகவே தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தமை மறுக்க முடியாத உண்மையாகும். அதற்கு உதாரணங்களாக வடக்கின் நுழைவாயிலாக கருதப்படக்கூடிய ஓமந்தையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடியையும், உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் முப்படையினரும் பிடித்து வைத்திருந்த தமிழ் மக்களின் காணிகளையும் குறிப்பிடலாம்.
2015 ஜனவரி எட்டாம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றித்தின் பின்னர் அம்மாதமே உடனடியாக ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியை நீக்குமாறு இராணுவத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் உத்தரவிட்டதற்கமைய அச்சோதனைச் சாவடி உடனடியாக நீக்கப்பட்டது. அத்தோடு முன்னைய ஆட்சியாளர்களால் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அதன் உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு திருப்பி வழங்கமாட்டோம் என்று பிடித்து வைத்திருந்த காணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் கீழ் மீண்டும் படிப்படியாக வழங்கப்பட்டு தற்போது வடக்கு கிழக்கில் சுமார் 85 வீதமான காணிகளும், யாழ்ப்பாணத்தில் சுமார் 75 வீதமான காணிகளும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு அங்கே அவர்கள் மீளவும் குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர். எஞ்சியிருக்கின்ற பொதுமக்களின் காணிகளும் வெகுவிரைவில் அவர்களுக்கு மீள் அளிக்கப்படும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டிருக்கின்றது.
“வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பொறுமை இழந்துள்ளனர். இதனை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமானால் அம்மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க வேண்டும். இதனூடாகவே
நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய தேசிய நல்லிணக்கத்தை இலங்கையின் சகல இன மக்கள்
மத்தியிலும் உருவாக்க முடியும். அதற்கு சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும்” என்பதை வெளிப்படையாகவே தன்னுடைய இந்த கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கூறியிருந்தார். இதனூடாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்ததுபோலவே இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றின் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களையும் தவிர
இலங்கையின் வேறு எந்த ஜனாதிபதிகளோ பிரதமர்களோ தமிழ் மக்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டுமென வெளிப்படையாக இதற்கு முன்னர் கூறியிருக்கவில்லை.
ஆகவே தமிழ் மக்களின் அரசியல் சமூகப் பிரச்சினைகளை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் ஒரு ஜனாதிபதியாகவே மைத்ரிபால சிறிசேன அவர்கள் இருந்து வருகிறார்.
இலங்கையில் பல தசாப்தங்களாக
வேரூன்றியிரக்கும் இந்த அரசியல் பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. வடக்கில்
தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடம் கையளிக்கும் செயற்பாட்டின் போதே “வடக்கில்
இராணுவத்தினர் அகற்றப்படுகிறார்கள். இதனால் புலிகள் மீண்டும் வரப்போகிறார்கள்” என தென்னிலங்கை
பெரும்பான்மை சிங்கள மக்களை பயமுறுத்தி அவர்களிடத்தில் அச்சநிலையொன்றை தோற்றுவிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர், ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் பங்கம் விளைவிக்கின்றார்கள்.
புதிய அரசியலமைப்பு விடயத்திலும் அவர்களால் பெரும்பான்மை சிங்கள மக்கள் தொடர்ச்சியாக அச்சமடையச் செய்யப்படுகிறார்கள். தான் மீண்டும் ஜனாதிபதியாகினால் புதிய அரசியலமைப்பை உருவாக்குவேன் என 2015 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தற்போது புதிய அரசியலமைப்பு உருவாகினால் “ஈழம்” உருவாகிவிடும்
என்ற பொய்யான கருத்தை தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் கூறி அவர்களை ஒரு அச்சநிலைக்குள் வைத்திருப்பதன் மூலம் தமது இனவாத அரசியலை வெற்றிகரமாக தென்னிலங்கையில் முன்னெடுத்துச் செல்கிறார். அதன்
பிரதிபலன்களையே கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளினூடாக எம்மால்
காணக்கூடியதாக இருந்தது.
எதிர்காலத்திலும் தேர்தல் ஒன்று வரும்போது இதே மஹிந்த தரப்பு தென்னிலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு தேசப்பற்று முகத்தினையும் தமிழ் மக்களுக்கு மென்போக்கான ஒரு போலி முகத்தினையும் காட்டிக் கொண்டு வரக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகமாக காணப்படுகின்றன. இதை தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
நம்நாட்டில், அனைத்து இன மக்களும்
சமவுரிமையுடனும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் கருத்துச் சுதந்திரத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உறுதிப்படுத்தக் கூடியது தனது தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே என்பதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அவரது கொள்கை விளக்க உரையினூடாக தெளிவாகக் எடுத்துக் கூறியிருக்கிறார். ஆகவே அதை சரியாக கையாளும் தரப்பாக தமிழ்த்தரப்பு இருக்க வேண்டும். அதனூடாகவே
பாதுகாப்பான எதிர்காலமொன்றை இலங்கைத் தமிழ் மக்கள் பெற்றுக்காள்ளக் கூடியதாக இருக்கும்.
(06.05.2018 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை)