கான்ஸ் சர்வதேச திரைப்பட விழா, ரொரண்டோ சர்வதேச திரைப்பட விழா, டோக்கியோ சர்வதேச திரைப்பட விழா, உட்பட உலகம் முழுவதும் பல திரைப்படவிழாக்களில் காண்பிக்கப்ட்டு பெரும் வரவேற்பினைப்பெற்ற இயக்குனர் அசோக ஹந்தகமவின் புத்தம் புதிய திரைப்படம் “இனி அவன்” டிசம்பர் 21ம் திகதி முதல் இலங்கை இரசிகர்களுக்காக இலங்கை முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்க்கையினை பிரதிபலிக்கக்கூடிய இப்படம் சர்வதேச ரீதியில் இடம்பெற்ற திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாது இலங்கையில் முதன்முறையாக இன மொழி வேறுபாடுகளற்ற வகையில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இரசித்துப் பார்க்கக்கூடியவகையில் “இனி அவன்” திரைப்படம் இலங்கை சினிமா இரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தினை வழங்கவிருக்கிறது.
இலங்கையின் புகழ்பெற்ற இயக்குனர் அசோக ஹந்தகமவின் இயக்கத்தில் இலங்கை நடிகர்களான தர்ஷன் தர்மராஜ், சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா, ராஜா கணேசன், மல்கம் மசாடோ மற்றும் கிங் ரட்ணம் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்கள். அத்தோடு ஒளிப்பதிவு சண்ண தேசப்பிரிய, இசை கபில பூகலஆராச்சி, படத்தொகுப்பு அஜித் ராமநாயக்க, கலை சுனில் விஜேரத்ன ஆகியோருடன் ஈ - கல்ச்சர் புரொடக்ஷன் வழங்கும் “இனி அவன்” திரைப்படத்தினை ஜகத் வெள்ளவத்தை மற்றும் அனுர பெர்னாண்டோ ஆகியோர் தயாரித்திருக்கின்றார்.