A Promised Land

03 மார்ச் 2012

மெரினா - விமர்சனமல்ல ஒரு பார்வை



சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான விடயங்களை சொல்லும் திரைப்படங்கள் தமிழ்சினிமாவில் வெளிவருவது குறைவு. அப்படி வரும் படங்கள் மக்களால் இரசிக்கப்படுபவையாகவும் அவர்களுடைய மனங்களில் என்றும் இடம்பிடிப்பவையாக இருந்திருக்கின்றது. அத்தோடு விருதுகளும் வாங்கியிருக்கின்றன. அந்தவகையில் கடந்தமாதம் வெளியான திரைப்படம்தான் மெரினா.



பசங்க படத்தின்மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகி அந்தப்படத்திற்கு தேசிய விருதையும் பெற்று இந்திய சினிமாவையே தனதுபக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவரான இயக்குனர் பாண்டிராஜின் இன்னுமொரு காத்திரமான படைப்புத்தான் இந்த மெரினா. தனது படங்களில் சிறந்த திரைக்கதையையும் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பை நடிகர்களிடமிருந்து பெற்று சிறந்த படமாக வழங்கும் இவர் மெரினாவிலும் இதே பாணியினை கையாண்டிருக்கிறார். அத்துடன் இவரே தயாரித்து வெளியிட்டு இருக்கும் படம் என்பதும் சிறப்பு.



இயக்குனர் உண்மையான கதாபாத்திரங்களை கதைக்குள் புகுத்தி அதை கதைக்கு ஏற்றதுபோல மெருகூட்டி அலட்டல் இல்லாத நடிப்பை அந்தந்த கதாபாத்திரங்கள்மூலம் திரைப்படமாக வழங்கியிருப்பது நன்றாக இருக்கிறது. படத்தில் அம்பிகாபதியினை சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டு அந்த கதாபாத்திரத்துன் ஏனைய துணைக்கதாபாத்திரங்களை திரைக்கதையில் கொண்டுவந்திருப்பது சிறப்பானதாக இருக்கின்றது. அம்பிகாபதியாக வரும் பக்கடா பாண்டி அம்பிகாபதி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான். அத்தோடு ஏனைய சிறுவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நச்சென்று பதிந்துபோகும் வகையில் இருப்பது இயக்குனருடைய திறமை.


சிவகார்த்திகேயன் செந்தில்நாதன் எனற கதாபாதத்திரத்தில் நன்றாக செய்திருக்கிறார். ஏற்கனவே சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள்மூலம் தனது திறமைகளால் சிறியோர் முதல் பெரியவர்களின் மனங்களில் இடம்பிடித்த ஒருவராக இருந்துகொண்டு வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் இவருடை முதல்படமே நல்ல ஒரு இயக்குனருடைய வித்தியாசமான படமான அமைந்திருப்பது இவருக்கு எதிர்காலத்தில் நல்ல ஒரு இடத்தினை தமிழ் சினிமாவில் தேடிக்கொள்ள ஆணிவேராக அமைந்திருக்கிறது. இவர் வரும் இடங்களிலெல்லாம் சிரிப்போ சிரிப்பு. பிரகாசமான எதிர்காலம் சிவகார்த்திகேயனுக்கு காத்திருக்கு என்பதில் எந்தவித ஐயமில்லை. ஓவியாவுடனும் கதைக்கேற்றபடி நன்றாக நடித்திருக்கிறார். ஓவியாவும் அலட்டிக்கொள்ளாத நடிப்பால் கவர்கின்றார். அதேபோல் செந்தில்நானுடைய நண்பனாக வரும் சதீசும் கலக்கியிருக்கிறார். அவர் இவர் என்று குறிப்பிட்டு சொல்லாமல் அந்த வயது போன பெரியவர் தொடக்கம் நடனமாடும் அந்த சிறுமிவரை நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.


தொழில்நுட்ப விடயங்கள் என்று பார்க்கும்போது ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நன்றாக இருக்கிறது. இருவரும் புதுமுகங்கள் என்றாலும் சிறப்பாக தங்களது வேலையை செய்திருக்கிறார்கள். இதே வேளை இசையினைப்பற்றியும் சொல்லவேண்டும் சிறிய வயதேயான புதுமுகம்  "க்ரிஷ் ஜி" ம் அசத்தியிருக்கிறார். பின்ணணி இசையும் நன்றாக இருக்கிறது. "வணக்கம் வாழவைக்கும் சென்னை" மற்றும் "காதல் ஒரு தேவதையின் கனவா" என்றபாடலும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகள் க்ரிஷ நல்ல ஒரு எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கின்றது.

இன்னொரு முக்கியமான விடயத்தினையும் இங்கே கட்டாயம் நான் குறிப்பிடவேண்டும். ஊடகங்கள் சிவகார்த்திகேயனை மெரினாவினுடைய ஹீரோவாக சித்தரித்தாலும திரைக்கதையில் ஹீரோ பக்கடா பாண்டிதான். சிவகார்த்திகேயனையும் ஓவியாவையும் ஏனையவர்களையும் ஏஜண்ட் கதாபாத்திரங்களாகவே இயக்குனர் திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் உண்மை.


மொத்தத்தில் இயக்குனர் பாண்டிராஜின் மெரினா அசத்தலான தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு தேவையான நல்ல ஒரு காத்திரமான படைப்பு.





*என்னுடைய 4 வருட பதிவுலக வாழ்க்கையில் ஒரு திரைப்படத்தைப்பற்றி எழுதும் முதலாவது பதிவு இதுதான்.*